கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரிப் பாகங்களை வழங்கிய நிறுவனம் முறைகேடானது என்பதால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட புதிய வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதுதொடர்பாக பூவலகில் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத் பூஷன், கூடங்குளம் அணு உலைக்கு உதிரி பாகங்கள் வழங்கி நிறுவனம், தரமற்ற பொருட்களை தயாரித்தாக ரஷ்யாவில் வழக்கு தொடரப்பட்டு அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் முன்னணி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதை நினைவுப் படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அந்நிறுவனம் கருப்பு பட்டியலில் உள்ளது எனவும் அவர் வாதிட்டார். எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது என்றும், இந்த அணு உலையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதா என்பது குறித்து ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பிரசாத் பூஷன் வாதிட்டார்.
மேலும் கூடங்குளத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், இந்திய அணுசக்தி கழகம் மற்றும் இந்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வறிக்கையும், மத்திய-மாநில அரசுகள் பின்பற்றுகிறதா ? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரசாத் பூஷன் வலியுறுத்தினார்.
இவைகளை கேட்டறிந்த நீதிபதிகள், இது குறித்து முழுமையான தகவல்களை கேட்டறிந்தபின்பு, வழக்கு விசாரணையை ஏற்றுகொள்வதாக கூறி, இன்றைய விசாரணையை ஒத்தி வைத்தனர்.