ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்துத்துறைகளிலும் கால்பதித்துள்ளனர். எந்த பணியிடத்திலும் பெண்களின் பங்கு குறிப்பிட்டுச்சொல்லும் விதமாக இருக்கிறது.
சாதனை படைக்கும் பெண்கள் பலர் இருந்தாலும், குடும்பப் பொருளாதார சுமையை ஈடுகட்ட மாதச் சம்பளத்திற்காக வேலைக்கு போகும் பெண்களும் பெருமளவில் இருக்கிறார்கள்.
பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றனவா பணியிடங்கள்? விசாகா வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? தற்போதைய நிலை என்ன?
பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் தொல்லைகள் சொல்லி மாளாது. தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வீட்டு வேலை, தினக்கூலி வேலை என அனைத்து இடங்களிலும் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாவதாக மகளிர் அமைப்பினர் கூறுகின்றனர்.
1997 ல் ராஜஸ்தானின் பன்வரி தேவி வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விசாகா வழிகாட்டுதல் படி பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பெண்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
விசாகா அமைப்பின் பரிந்துரைபடி, பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்தால் அந்த நிறுவனங்களில் பெண்களின் குறைகளை சொல்வதற்கென ஒரு அமைப்பு அமைக்கப்பட வேண்டும். இதில், நிறுவனம் சாராத பெண்களும் இடம் பெற வேண்டும்.
அலுவலகத்தில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டால் இதுகுறித்து, அந்த அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை அனைத்து நிறுவனங்களிலும் அமல்படுத்தினால் மட்டுமே, பாதுகாப்பாக உணர முடியும் என்கின்றனர் பெண்கள் அமைப்பினர்.