இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல், நேற்று முன்தினம் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேரை, உடனடியாக விடுவிக்கக்கோரி, அந்த மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில், தமிழக மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 5 மீனவர்களுக்கு, இரண்டு ஆண்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் 30 பேரை சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கைச் சிறையில் வாடும் அனைத்து, தமிழக மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 26 பேரை, நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத் தீவை மீட்பது ஒன்றே தீர்வாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செய்தித் தொடர்பாளரும், யுவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.