வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'மகாசேன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மகாசேன் புயல், சென்னைக்கு தென்கிழக்கே ஆயிரத்து 300 கிலோமீட்டர் தூரத்திலும் கார் நிகோபர் தீவிலிருந்து 350 கிலோமீட்டர் தூரத்திலும் நிலைகொண்டுள்ளது.
வடமேற்குத் திசை நோக்கி நகரும் மகாசேன் புயல், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடும் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர் வடகிழக்குத் திசை நோக்கி புயல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக அந்தமான் நிகோபர் தீவு மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடல் புயல் திசைமாறி பங்களாதேஷ்-மியான்மர் கடற்கரை பகுதிக்குச் செல்ல வாய்ப்பிருப்பதால் தமிழகத்திற்கு புயலால் ஆபத்து ஏற்படாது என தெரிகிறது.