"இந்து என்ன கிறிஸ்து என்ன இதயம் ஒன்று தான்....
இதயத்தோடு வாழ்ந்திருந்தால் என்றும் இன்பம் தான்....
அல்லா என்ன, இயேசு என்ன அன்பு ஒன்று தான்....
அன்பு காட்ட தெரிந்திருந்தால் சண்டை இல்லை தான்...."
மதுரை அருகே இருக்கும் டி.குன்னத்தூர் கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பாடல் தான் போதிக்கப்படுகிறது. இளம் நெஞ்சங்களில் விதைக்கப்படும் இந்த விதை எதிர்காலத்தில் சாதியற்ற சமூகத்தை பரவலாக ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இன்றைய சூழலில்,நாட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகளில் பல, சாதி, மத மோதல்களால் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. சமீப நாட்களாகக் கூட எங்கேயோ யாரோ கொளுத்திப் போட்ட சாதி(தீ) மளமளவென பரவி மக்களை எரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சாதி, மதங்களை மறந்து சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த குன்னத்தூர் கிராம மக்கள்.
ஊரை ஊக்குவித்த மாவட்ட ஆட்சியர்: T.குன்னத்தூர் கிராமத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் 30 திருமணங்கள் நடந்துள்ளன. சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் இந்த கிராம ஊராட்சிக்கு, மாவட்ட ஆட்சியர் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கியிருக்கிறார்.
பல்வேறு சமூகத்தினர் வாழும் இந்த கிராமத்தில், அனைவரும் ஒற்றுமையுடன், வேற்றுமையின்றி வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பள்ளியிலும் பிறருக்கு உதவி செய்பவர் உயர்ந்தவர் என்றும், பிறருக்கு கொடுத்து உதாவதவர் தாழ்ந்தவர் என்று சமூக நல்லிணக்க பாடத்திற்கே முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
T.குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் சங்கர் கூறுகையில் தங்கள் ஊரில் தீண்டாமை முற்றிலுமாக கிடையாது, தனித்தனி மயானம் கிடையாது, டீக்கடைகளில் தனி கிளாஸ் கிடையாது, கோயில் திருவிழாக்கள் இணைந்து கொண்டாடப்படுகிறது, அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரிவினர் தங்களுக்கென தனியாக சுடுகாடு கேட்கும் இந்த காலத்தில், T.குன்னத்தூர் கிராமத்திலுள்ள அனைத்து சாதியினரும் ஒரே மயானத்தை பயன்படுத்துவது சமூக நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் கனவு செய்ப்பட வாழ்ந்து காட்டுக் கொண்டிருக்கும் இந்த கிராம மக்களும், கிராமும் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு முன் உதாரணம்.