பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு இருக்கும் அதீத ஆற்றலை நேரடியாக அறிந்துகொள்ள ஏற்ற இடம் ஒகேனக்கல். இங்கு நீர் வீழ்ச்சிகள் எழுப்பும் சத்தம் அருகில் செல்பவர்களை அச்சத்தில் உறையவைத்துவிடும். அதேநேரத்தில் பாதுகாப்பான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குளியலுக்கும் இது ஏற்ற இடம்.
ஒற்றை அருவியாக இல்லாமல் அருவிகளின் தொகுப்பாக காட்சியளிப்பது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் சிறப்பு. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் கிராமம், இந்த அருவியின் காரணமாகவே தேசிய சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தர்மபுரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் ஒகேனக்கல் உங்களை வரவேற்கும். குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரியை ஆதாரமாகக் கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மூலிகைச் செடிகள் நிறைந்த மலைப்பிரதேசம் வழியாக பாய்ந்தோடி வருவதால், ஒகேனக்கல் அருவி நீர் மருத்துவ குணம் நிறைந்தது என்று கூறப்படுகிறது. ஆயில் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளிப்பது அத்தனை ஆனந்தம் என்கின்றனர் சுற்றுலா பயணிகள்.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மற்றொரு அம்சம் பரிசல் சவாரி. ஐந்தருவி, ஆறருவி என்று அச்சமூட்டும் மிகப்பெரிய அருவிகளுக்கு அருகில் பயணிப்பது உங்களுக்கு நிச்சயம் திரில் அனுபவத்தைத் தரும்.
வாழ்வின் மகிழ்ச்சியான தருணத்தை பதிவு செய்யும் விதமாக இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருந்தவாறு நீங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும். விதவிதமான மீன்களை சுவைத்து மகிழ முடியும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் இந்த சுற்றுலா தலத்தில் தங்குவதற்கு தமிழக அரசுக்கு சொந்தமான ஓட்டல் தமிழ்நாடும், தனியார் நிறுவன ஓட்டல்களும் உள்ளன. நாள் ஒன்றுக்கான கட்டணம் 200 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஒகேனக்கல் வந்தால், உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.