இன்று 16.6.2013 உலக தந்தையர் தினம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னும் கூற்றை பலர் கடைபிடிக்கும் அதே சூழலில், தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்ற கூற்றுக்கு அடையாளமாக விளங்குகிறார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 83 வயதான ரெங்கம்மாள்.
ஐந்து மகன்கள் ஒரு மகள் என உறவுகளின் எண்ணிக்கை வலிமையாக இருக்கும் சூழலில் வாழ்ந்த ரெங்கம்மாள் பாச உணர்வுகளின் வலிமையற்ற தன்மையால் தனது மகன் சுப்ரமணியத்தால் துன்புறுத்தப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்.கோயிலில் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு பின்னர் தள்ளப்பட்டார் ரெங்கம்மாள்.
காலமும், காற்றும் ஒரே திசையில் செல்லும் என்னும் இறுமாப்பில் இருந்த சுப்ரமணியத்தின் எண்ணத்தில் இடி விழுந்தது அவருக்கு திடீரென கை கால்கள் செயல்படாமல் போனபோது. எந்த குடும்பத்தில் இருந்து கொண்டு தனது தாய் ரெங்கம்மாளை துன்புறுத்தியும், துரத்தியும் விட்டாரோ அதே குடும்பம் கை கால் செயல்படாமல் போன சுப்ரமணியத்தை கைவிட்டு விட்டது.
ஆதரவளிக்க யாருமற்ற நிலையில் சுப்ரமணியத்தின் மனக்கண் முன்வந்தது தனது தாய் ரெங்கம்மாள்தான். சிலரின் உதவியுடன் தனது தாயைக் கண்டுபிடித்த சுப்ரமணியம் அவரிடம் தஞ்சமடைந்தார்.
ஏற்கனவே பிச்சை எடுக்கும் நிலையில் இருந்த ரெங்கம்மாளுக்கு தனது மகன் முன்னர் செய்த துரோகத்தை விட கை கால் செயல்படாமல் அவதிப்படும் தற்போதைய சூழல் நெகிழ வைத்துவிட்டது. துரோகத்தை தாய்ப் பாசம் வென்றுவிட்டது. குடும்பம் கைவிட்டால் என்ன நான் இருக்கிறேன் என்று கூறி மகனை அரவணைத்துக்கொண்டார் ரெங்கம்மாள்.
திருப்பூரில் உள்ள கோயில் ஒன்றில் இந்த தாயும் மகனும் படும்பாட்டை பார்த்த சிலர் கருமத்தம்பட்டி அருகே உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரம் ஒன்றில் இவர்களை சேர்த்தனர். இன்று இருவருமே அந்த ஆசிரமத்தில் கவுரவமாக பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறும் ரெங்கம்மாள் 83 வயதில் தனது மகனுக்கு நடைப்பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளித்து ஆதரவளித்து வருகிறார்.
தனக்கு என்ன கெடுதல் செய்தால் என்ன அவன் தனது எதிரி அல்ல எவ்வயதானாலும் தான் பெற்றெடுத்த குழந்தைதான் என்ற தாய்மை உள்ளத்தில் வாழும் ரெங்கம்மாள் போன்ற தாய்மார்கள் இன்னமும் இந்த பூமியில் வாழ்ந்துதான் வருகின்றனர் என்று எண்ணும்போது ஆச்சரிமே மிஞ்சுகிறது.
- சுரேஷ் குமார், கோவை செய்தியாளர்.