தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அளித்திடுவோம் என்றார் பாரதி.
ஆனால், இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதத்தினர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் எடை குறைந்து அவதிப்படுவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
உணவு தானியக் கிடங்குளில் எலிகளும், புழுக்களும், பூச்சிகளும் வயிறு புடைக்க தானியங்களை உண்டு கொழுக்க கோடிக்கணக்கான இந்திய மக்கள் இன்றும் இரவில் பட்டினியோடு படுக்கைக்குச் செல்லும் நிலைதான் இருக்கிறது.
இந்த நிலையில் தான் உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் அமளியால் நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏழை, எளிய மக்கள் பயனடைவார்கள். நாட்டிலுள்ள 67 சதவீத ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கிராமப்புறங்களில் இருக்கும் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களில் இருக்கும் 50 சதவீத மக்களுக்கும் மானிய விலையில் உணவுப் பொருள் கிடைக்கும். 80 கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவர் என்கிறது ஆளும் காங்கிரஸ் அரசு.
2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் எதிர்கட்சிகளிடம் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் என்று நம்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்: தேசத்திற்கு மிக முக்கியமான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அவசரச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது ஆளுங்கட்சியின் மோசமான விளம்பர யுத்தி என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், உணவு பாதுகாப்பு மசோதா குறித்து ஆலோசிக்க ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டினால் அதனை பா.ஜ.க., வரவேற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசின் திட்டமோ வேறு என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள் : அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதன் மீது நேரடியாக விவாதம் நடத்தலாம். அப்போது உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றவும் பா.ஜ.க ஏழைகள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டவும் முடியும் என காங்கிரஸ் தரப்பு நம்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.
கோடிக்கணக்கான மக்களின் வாட்டத்தைப் போக்கும் நிவாரணியாக இந்தச் சட்டம் அமையுமா? இல்லை இதுவும் வெறும் அரசியல் கூச்சலாக எழுந்து பின்னர் அடங்கிப்போகுமா என்பதை கவலையுடன் கூர்ந்து கவனிக்கின்றனர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் இந்தியர்கள்.
-பாரதி ஆனந்த்