![]() |
சென்னையை அடுத்த ஒரு கிராமத்தில் அதிகபட்சம் 50 வீடுகள்தான் இருக்கும். ஆனால் அந்த கிராமத்தின் இரண்டு முகவரிகளைக் கொண்டு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த இரண்டு தெருக்களில் வசிப்போருக்கு அவ்வளவு வாகனங்கள் தேவையா? எதற்காக இத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன? புதிய தலைமுறை மேற்கொண்ட புலனாய்வில் தெரியவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட புதுப்பேடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போலியான முகவரியில் பதியப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை உறுதி செய்ய புதிய தலைமுறை களம் இறங்கியது.
இல்லாத முகவரியில் வாகனங்கள் பதிவு
குன்றத்தூரை அடுத்துள்ளது புதுப்பேடு கிராமம். இங்கு இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், இந்த கிராமத்தின் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஒரு முகவரியிலும், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஒரு முகவரியிலும் ஐநூறுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அது போன்ற முகவரிகளே அங்கு இல்லை என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.
மத்திய மோட்டர் வாகனச் சட்டத்தின் படி, அதிக மாசு ஏற்படுத்தும், சுமை தூக்கும் வாகனங்களை சென்னை நகரத்திற்குள் பதிவு செய்ய தடை இருக்கிறது. இதுவே இதுபோன்ற போலி முகவரிகளில் வாகனங்கள் பதியப்படுவதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
ஆனால் இல்லாத முகவரிகளில் வாகனங்களைப் பதிய அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வியோடு, இத்தகைய வாகனங்கள் சமூகவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதை அவர்கள் உணரவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
மேலும் இதுபோன்ற அனுமதிகளால், விதிகளுக்கு புறம்பாக அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், சென்னையில் மாசு தொடர்பான பல்வேறு உடல் உபாதைகள் அதிகரிக்கும் நிலை உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து விளக்கம் கேட்டதற்கு, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பதில் தர மறுத்துவிட்டார்கள்.
போலி முகவரிகளில் வாகனங்கள் பதியப்பட்டது குறித்து விசாரணைக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருக்கிறது.
போலி முகவரிகளில் வாகனங்கள் பதியப்பட்டது குறித்து விசாரணைக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருக்கிறது.
வாகன பதிவின் போதே உரிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து பிறகு பதிவு செய்தால் மட்டுமே இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும்.