தமிழகத்தில் பூரண மது விலக்குக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மது ஒழிப்புக்கு எதிரான மாணவர் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி மாணவி நந்தினி உள்ளிட்டோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு ஆதரவாக மற்றொரு சட்டக் கல்லூரி மாணவர் விஜிகுமார், லயோலா கல்லூரி மாணவர் ஜோ பிரிட்டோ, சாய் ஜோதி கல்லூரி மாணவர் மோகன், எஸ்.வி.என்., கல்லூரியைச் சேர்ந்த கருப்பசாமி, அண்ணாமலை பல்கலை முன்னாள் மாணவர் யுவராஜ், காந்தியவாதி சசிபெருமாள் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த திவ்யா, மற்றும் வழிக்கறிஞர்கள், பொதுமக்கள் என நந்தினிக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முக்கிய கருத்தை ஒன்றை வலியுறுத்த விரும்புவதாக தெரிவித்தனர். அதாவது திப்பு சுல்தான் ஆட்சியில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்ததாகவும், பூரண மதுவிலக்கு அமல் படுத்தினால் அரசின் வருமானம் பாதிக்கும் என அவரது அமைச்சர்கள் அறிவுறுத்தியும் திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கு கொள்கையை பின்பற்றியதாகவும் தெரிவித்த மாணவர்கள் இதனை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல் படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நேற்று தனி ஆளாக மதுவுக்கு எதிரான அறப்போராட்டத்தை துவங்கிய நந்தினிக்கு இன்று பெருந்திரளான ஆதரவு பெருகி வருகிறது. தனது அறப்போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவு குறித்து புதிய தலைமுறைக்கு நந்தினிஅளித்த பேட்டியில் : தனது போராட்டத்திற்கு பெண்கள் எழுச்சி இயக்கம், தமிழ்நாடு மாணவர் இயக்கம், போன்ற இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும். தஞ்சாவூர் , தேனி, மாவட்ட மாணவர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறுஞ்செய்தி , பேஸ்புக் மூலமும் தங்களது போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
சிறையிலும் உண்ணாவிரதம் தொடர்வேன்.......
பூரண மதுவிலக்கு கோரி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய நந்தினி நேற்று இரவு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நந்தினி மீண்டும் கைது செய்யப்பட்டாலும் சிறையில் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். ஏற்கனவே பூரண மதுவிலக்குக் கோரி தாம் எழுதிய கடிதத்திற்கு : "இது அரசின் கொள்கை முடிவு" என்று பதிலளித்த அரசு தற்போது பெருகி வரும் மாணவர் எழுச்சியை கண்டு தனது கோரிக்கையை பரிசீலிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
நந்தினி போராட்டம் நடத்தும் பகுதியில் பொதுமக்களே முன் வந்து சாமியானா அமைத்துக் கொடுத்துள்ளனர். பெருந்திரளான பெண்களும் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் செல்கின்றனர்.
மாணவர் ஜோ பிரிட்டோ
மதுவால் தமிழகத்தில் தினம் தினம் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. மதுவை ஒழிக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒன்றிணைந்து பெரிய அளவில் போராடுவோம். மதுரையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவி நந்தினியையும் அவருக்கு ஆதரவு அளித்து வரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களையும் நேரில் சந்திக்க இருக்கிறோம். மதுவை ஒழிக்கும் வரை மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று மாணவர் ஜோ பிரிட்டோ கூறியுள்ளார்.
மதுவுக்கு எதிராக கோவையிலும் மாணவர்கள் போராட்டம்...
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 2 மதுபானக்கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.