சுற்றுச்சூழலை மாசடைய செய்வதோடு, நிலத்தடி நீர் வறண்டு போகச் செய்வதிலும் பிளாஸ்டிக் கழிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, எளிதில் அழியாத, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பயன்படுத்த நம்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்கும் விதமாக, பயன்டுத்திய பிறகு வீசி எறியும் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யும் பணியை திண்டுக்கல் மாவட்டதில் உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தி எறியப்படும் மற்ற பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது மக்களின் இன்றியமையாததாக மாறியுள்ள நிலையில், வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளை சிறந்த வருமான வாய்ப்பாக மாற்றும் வகையில் மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ளனர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள்.
திண்டுக்கல் ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பிளாஸ்டிக் மறு சுழற்சியை 106 பெண்கள், 3 குழுக்களாக சேர்ந்து பயிற்சி பெற்று, கனரா வங்கியில் கடன் பெற்று அதற்கு தேவையான இயந்திரங்கள் வாங்கி பிளாஸ்டிக் மறு சுழற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மூலப்பொருளாக பழைய பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை சேகரிப்பவர்களிடமிருந்து கிலோ 5 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அவற்றை உருக்கி, இயந்திரம் மூலம் மறுசுழற்சி துண்டுகளாக்கி மறு விற்பனை செய்கின்றனர். இப்படி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள் ஒரு டன் 30 ஆயிரம் வரை விலை போகும் என்றும் இதற்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர் இதில் ஈடுபடும் பெண்கள்.
இங்கு மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கை தார்ச் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். இந்த தொழிலில் தினக்கூலியாக 150 ரூபாய் வரை கிடைப்பதோடு, ஒன்றரை ஆண்டில் வங்கிக் கடனையும் சுயஉதவிக் குழுப் பெண்கள் அடைத்துள்ளனர். மேலும், ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர், இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள். வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் சுற்றுபுற சூழலை பாதுகாக்க பாடுபடுவதால் மாநில அரசின் விருது பெற்றுள்ளதோடு விருப்பமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.