எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாகவும், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாகவும் பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
உரிய நடவடிக்கை எடுப்போம் - சல்மான்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்து வந்த 20 தீவிரவாதிகள் இந்த, தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
பாதுகாப்பில் மத்திய அரசு மெத்தனம்
இந்த தாக்குதல் தொடர்பாக, மத்திய அமைச்சர்களின் விளக்கங்களுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை கைவிடுமாறு, பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் யஷ்வந்த் சின்கா வலியுறுத்தியுள்ளார். சீன ராணுவத்தின் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் போன்ற சம்பவங்களால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்கு பாகிஸ்தான் மறுப்பு
இதனிடையே, தாக்குதல் நிகழ்ந்த பூஞ்ச் பகுதிக்கு ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங் (BIKRAM SINGH) இன்று செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-பசுமை நாயகன்