காங்கிரஸ் கட்சியின் அரசியல் விளையாட்டால் தெலங்கான என்னும் குழந்தை பிறந்துள்ளது. தெலங்கான தனி மாநிலம் கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடிவரும் நிலையிலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் , மாணவர்கள் என பலர் தற்கொலை செய்த நிலையிலும், தெலங்கான பகுதியில் தொடர் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு அரசு எந்திரம் முடக்கப்பட்ட போதும் கொடுக்கப்படாத தெலங்கான, 2014 லோக்சபா தேர்தல், ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரவுள்ள நிலையில் கொடுக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேங்களை கிளப்பியுள்ளது.
1956 - இல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கு மொழி அடிப்படையில் தெலங்கான பகுதி, மெட்ராஸ் மாகணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திர ( ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதிகள் ) மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தெலங்கான பகுதி மக்கள் எழுத்தறிவில், சீமந்திர பகுதி மக்களுடன் ஒப்பிடும் போது பின்தங்கியவர்கள். வேலைவாய்ப்புகளையும் சீமந்திர மக்களிடம் இழந்து விட்டதாக தெலங்கான மக்கள் எண்ணுகிறார்கள். தெலங்கான - இல் நீர்பிடிப்பு பகுதிகளில் உருவாகும் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளாலும் தெலங்கான பகுதிக்கு பெரிய பயன் ஏதுமில்லை. ஆறுகள் கிழக்கு நோக்கி சென்று கடலோர ஆந்திர பகுதியையும், ராயலசீமாவையும் வளமாக்குகின்றன. தெலங்கான பகுதியின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணை கட்டும் முயற்சிகளும் இல்லை. ஆந்திரத்தை ஆண்ட சுமார் 16 முதல்வர்களில் 4 பேர் மட்டுமே தெலங்கானவை சேர்ந்தவர்கள். இது போன்ற பல்வேறு காரணங்களினால் தாங்கள் ஒதுக்கப்படுவதாக தெலங்கான மக்கள் தனி மாநிலம் கோரி போராடி வந்தனர். பின் தங்கிய பகுதியான வாரங்கல், கரீம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் நடமாட்டமும் உண்டு.
ஆந்திரா - வில் உள்ள மொத்தம் 42 லோக்சபா தொகுதிகளில் தெலங்கான பகுதியில் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. சுமார் 294 சட்டமன்ற தொகுதிகளில் 117 தொகுதிகள் தெலங்கானாவில் வருகின்றன. UPA 1,2 ஆட்சி அமைய ஆந்திரா பெரும் பங்கு வகித்தது. குறிப்பாக 2009 லோக்சபா தேர்தலில் 33 லோக்சபா உறுப்பினர்கள் அக்கட்சிக்கு கிடைத்தனர். ஜெகன் மோகன் ரெட்டி - காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலை அடுத்து YSR காங்கிரஸ் 2009 - இல் உதயமானது. சொத்துகுவிப்பு வழக்கில் CBI - ஆல் கைது செய்யப்பட்டு ஜெகன் சுமார் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் பழி வாங்கும் செயலால் தான் ஜெகன் சிறையில் உள்ளார் என பெரும்பான்மையான ராயலசீமா, கடலோர மக்கள் நம்புவதாலும், ஜெகனின் தந்தை காலம் சென்ற ராஜசேகர ரெட்டியின் அசைக்க முடியாத செல்வாக்காலும், ஜெகன் அலை ராயலசீமா, கடலோர பகுதிகளில் புயலாக வீசுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இடைதேர்தல்களும் இதனை உறுதி படுத்தியுள்ளன. மறுபுறம் தெலங்கான ராஷ்டிர சமிதி, தெலங்கான பகுதியில் வலுவாக காலூன்றியுள்ளது. பிஜேபி - யோ 2014 - இல் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தெலங்கான உறுதி என அறிவித்துவிட்டது. இதன்மூலம் காங்கிரஸ் - இன் கோட்டையான ஆந்திரா மாநிலம், மெல்ல மெல்ல காங்கிரசிடம் இருந்து விலகிச்செல்கிறது.
ஒன்றுபட்ட ஆந்திரத்தை அறிவித்தால் எந்த பயனுமில்லை காங்கிரசுக்கு . தெலங்கான -வில் வாக்கு கிடைக்காது. சீமந்திர பகுதியில் ஜெகன். அதே நேரத்தில் தெலங்கான தனி மாநிலமாக அறிவித்தால், தெலங்கான பகுதியில் TSR உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு ஏற்படும். அதன்மூலம் 8 அல்லது 9 தொகுதிகளை பெற்றுவிடலாம் என்பது காங்கிரசின் எண்ணம். TSR - காங்கிரஸ் இணைப்புக்கும், தெலங்கான தனி மாநிலம் காரணமாக அமைய வாய்ப்புள்ளதால் காங்கிரஸ் தனி மாநிலத்தை அறிவித்துள்ளது. அதாவது சீமாந்திர பகுதியில் முற்றிலும் நம்பிக்கையை இழந்துவிட்டது காங்கிரஸ்.
மேலும் ஒரு அரசியலையும் செய்ய நினைத்தது காங்கிரஸ் அது ராயலசீமா - இல் இருந்து கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களை பிரித்து தெலங்கான உடன் இணைப்பது. இதன் மூலம் தன செல்வாக்கு குன்றியுள்ள சீமந்திர பகுதியின் லோக்சபா, சட்டமன்ற எண்ணிக்கைகளை குறைக்க வேண்டுமேன்பது நோக்கமாக இருக்கலாம் . எனினும் TSR எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது போன்றவை காங்கிரஸ், தெலங்கான தனி மாநிலத்தை, அம்மாநில மக்களின் தொடர் போராட்டங்களுக்காக கொடுத்ததா அல்லது தேர்தலுக்காக கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
வாக்குக்காக தனி மாநிலம் கொடுக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல. தெலங்கான தனி மாநிலம் கொடுக்கப்பட்டால் கொர்கலந்து தனி மாநிலம் மேற்கு வாங்க மாநிலத்தில் இருந்து பிரித்து கொடுக்கப்பட வேண்டுமென கொர்கலந்து முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது. எனவே கொர்க்ஹலந்து, விதர்பா ( மகாராஷ்டிரா பகுதி ) தனி மாநில கோரிக்கைகள் இனி எப்படி பயணிக்க போகின்றன என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேற்குவங்க மாநிலத்தில் CPM, TMC கோலோச்சி வரும் நிலையில், வாக்கை கவர கொர்கலந்து தனி மாநிலம் கொடுக்கலாமே என்ற தவறான எடுத்துக்காட்டை தெலங்கான, மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு கொடுத்து விட்டால் ஜனயாகம் வீழ்ந்து விடும்.
சிறிய மாநிலங்கள் வளர்ச்சி அடைவதில் முன்னணியில் உள்ளன என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. எனினும் அந்த கோரிக்கைகள் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துமா , நியாமானது தான, பிரிவினைக்கு வழி வகுக்குமா போன்றவற்றை ஆராய்ந்து கொடுக்கப்பட வேண்டுமே தவிர வாக்குக்காக அல்ல.
தெலங்கான தனி மாநிலமாகட்டும் நமக்கு வெறுப்போ, விருப்பமோ இல்லை. ஆனால் தவறான உதாரணமாக கூடாது என்பதே நம் கவலை....
- கவுதம் கார்த்திகேயன் -பசுமை நாயகன்