தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம், மக்களின் உடல் மற்றும் சமூக நலத்தை பாதிப்பதாக கூறி பல அமைப்புகள் பூரண மதுவிலக்கு கோரி அவ்வப்போது போராட்டங்களை நடத்திவருகின்றன. இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தங்கள் கிராமத்தில் அரசு அமைக்க இருந்த மதுபானக் கடையை திறக்கக் கூடாது எனக்கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் ஒரு கிராமத்தினர்.
மதுக்கடையே இல்லாத கிராமம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தினர், மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் .
கிட்டதட்ட 20 ஆண்டுகளாக மதுக்கடையே இல்லாத இந்த கிராமத்தில், அரசு மதுபானக் கடையை அமைக்க இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மதுக்கடையை திறக்க ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்டிமுடிக்கப்பட்ட மதுக்கடை திறக்கக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். இதற்காக கிராம ஊராட்சி மன்றம் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. போராட்டங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை காட்ட விரும்பாத மக்கள் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.
பல கிராமங்களில் போதிய பள்ளிக்கூடம் இல்லாமலும் சாலை வசதிகள் இல்லாமலும் இருக்கும் இன்றைய சூழலில் அனைத்து கிராமங்களிலும் அரசு மதுக்கடையை திறக்க ஆர்வம் காட்டுவது வேதனையளிக்கிறது என்கின்றனர் வடமலாபுரம் கிராமத்தினர்.