சென்னையில் ஆட்டோக்களுக்கு தூரத்தின் அடிப்படையிலான கட்டணங்களை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. தவிர ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான மீட்டர்களை ஆட்டோ வண்டிகளுக்கு அரசாங்கமே இலவசமாக பொருத்தித் தரும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது. ஆட்டோவில் பயணிப்போர் ஆபத்து நேரத்தில் அதிகாரிகளுக்கு அழைக்கக் கூடிய எச்சரிக்கை மணிகளும் அனைத்து ஆட்டோக்களுக்கும் பொருத்தித் தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு அறிவித்துள்ள விடயங்கள் பின்வருமாறு:
|
1.முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்படும்.
2. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 விழுக்காடு இரவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
3. காத்திருப்புக் கட்டணம், ஒவ்வொரு 5நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும்.
4. இந்தத் திருத்திய கட்டணம் இன்று முதல் (25.8.2013) நடைமுறைக்கு வரும்.
5. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகிதம் நாளிதழ்களில் பிரசுரம் செய்யப்படும். இதன் அடிப்படையில் பயணிகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
6. திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை 15.9.2013க்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
7. மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய 15.10.2013 வரை அவகாசம் வழங்கப்படும்.
8. இது மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னைப் பெருநகரில் இயங்கி வரும் ஆட்டோ ரிக்ஷாக்களில் இடத்தைக் காட்டும் கருவியுடன், அதாவது ஜி பி எஸ் உடன் கூடிய மின்னணு இலக்க அச்சடிக்கும் இயந்திரத்துடன், அதாவது, எலெக்டிரானிக் டிஜிட்டல் பிரிண்டர் உடன் கூடிய மீட்டர், விலை ஏதுமில்லாமல் அரசு செலவில் பொருத்தப்படும். இதற்காக அரசுக்கு 80 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் வழிவகை ஏற்படும்.
9. ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை, அதாவது பேனிக் பட்டனை பயணிகள் அழுத்தலாம். இதன் மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்து, அதன் அடிப்படையில் காவல் துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
10. ஆட்டோ ரிக்ஷாக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்கும். இந்தக் கண்காணிப்பின் போது, மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இது தவிர, வாகனம் பறிமுதல்செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும்.
11. ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும்.
இந்தியாவின் மற்ற பெருநகரங்களைப் போல சென்னையிலும் மீட்டர் அடிப்படையிலான ஆட்டோ கட்டண முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து, இந்திய உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நடவடிக்கைகளை அறிவிக்க கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நாளைய தினம் வடக்கிற்கு விஜயம் செய்கிறார் நவனீதம்பிள்ளை.
|
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார். முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் செல்லும் நவனீதம்பிள்ளை அங்கு மக்களை சந்திக்கவுள்ளார். அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் நவி பிள்ளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருகின்றார். யுத்தக்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தனது வடக்கு விஜயத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.