ஆகஸ்ட் 19, உலக புகைப்பட தினம். இதனை ஒட்டி மூத்த புகைப்படக்காரர், ஸ்டில் லைஃப் போட்டோகிராஃபியின் முன்னோடியான விவி என்று அழைக்கப்படும் விவேகானந்தனை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சக ஊழியருடன் அவரை சந்திக்கச் சென்றேன்.
சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கிறார் விவேகானந்தன். வாசலுக்கு வந்து இன்முகத்துடன் வரவேற்றார். உள்ளே நுழைந்தோம் நமது கண்கள் அவரது வீட்டை அப்படியே நோட்டம் விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான கேமராக்கள்.... பல்வேறு லைட்டிங் உபகரணங்கள் ஸ்டூடியோவுக்குள் ஒளிந்திருந்தது அவரது வீடு. சிறந்த கலை காலம் கடந்து நிற்கும், சிறந்த கலைஞன் வயதானாலும் சிந்தனையில் இளைஞன் தான் என்பதற்கேற்ப துடிப்புடன் பேசினார் 72 வயதான பி.ஏ.விவேகானந்தன்.
போட்டோகிராஃபி சொசைட்டி ஆஃப் அமெரிக்காவின் நிரந்தர உறுப்பினர் என்ற கவுரவத்தைப் பெற்றிருக்கிறார். இது தவிர போட்டோகிராஃபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ், இந்தியன் இன்டர்நேஷனல் போட்டோகிராஃபி போன்ற அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் அவர் போட்டோகிராஃபி சொசைட்டி ஆப் மெட்ராஸ், இந்தியன் இன்டர்நேஷனல் போட்டோ கவுன்சில் போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார்.
புகைப்படத்துறைக்கு வந்தது குறித்து முதலில் விவரிக்க ஆரம்பித்தார் விவி... என் தாத்தா ஆங்கேிலேயர் காலத்து போட்டோகிராஃபர். ஃபிலிம் ரோல் அறிமுகமாகாதா அந்த காலகட்டத்தில் எல்லாம் கிளாஸ் பிளேட்டில் படம் எடுக்கப்பட்டது. அந்த பிளேட் இங்கிலந்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து திரும்ப பிரின்ட் போட்டு வரும் என்பதை
கேட்டறிந்திருக்கிறேன். எனக்குள் ஒரு புகைப்படக்காரர் இருப்பதற்கு முதல் காரணம் என் தாத்தாவின் மரபணு தந்த வரம். அந்த வரத்தை நான் அடையாளம் கண்டு போற்றி வளர்த்துக் கொண்டேன்.
அதனாலேயே அரசு வங்கியில் அதிகாரியாக பணி கிடைத்தாலும், என் எண்ணம் எப்போதும் புகைப்படத்தின் வசமே இருந்தது. சுடர் விடும் விளக்கே ஆயினும் தூண்டுகோள் வேண்டும். அப்படி எனக்குள் இருந்த தீப்பொறியை தூண்டி விட்டார் என் மேல் அதிகாரி பாக்கியதுரை. அவரும் ஒரு சிறந்த போட்டோஃகிராபர். எனக்கு போட்டோகிராஃபி
தொழில்நுட்படங்களை அவர் தான் கற்றுத் தந்தார்.
என் முதல் கேமராவை 1968ம் ஆண்டு ரூ. 555க்ககு வாங்கினேன். யாஷிகா 635 , கேமராவின் மாடல் எண். எனக்கே சொந்தமான கேமரா கையில் கிடைத்தவுடன் என்னைச் சுற்றி இருந்த அத்தனையும் அவ்வளவு அழகாகத் தெரிந்தது. ஆங்கிலத்தில்..find beauty even in the ugliest thing...என்று கூறுவார்கள். அது போல் என் கேமரா கண் வழியாக நான் பார்க்கும்
ஒவ்வொரு பொருளிலும் ஒரு அழகு ஒளிந்திருப்பதை உணர முடிந்தது. அதனால் தான் இன்றும் கூட யாராவது உங்களது சிறந்த புகைப்படம் எது என்று கேட்டால் என் படைப்புகள் அனைத்துமே சிறந்தது தான் என்பேன். என் முதல் புகைப்படம் ஆந்திர பிரபா பத்திரிகையில் வெளியானது. அந்த தருணம் தந்த மகிழ்ச்சியை, பிரமிப்பை இன்றும் மறக்க முடியாது.
சரி... அது என்ன ஸ்டில் லைப் போட்டோகிராஃபி என்று நீங்கள் கேட்கலாம். எல்லா பொருட்களுக்குமே உயிர் இருக்கிறது, அதனை வெளிக் கொண்டு வரும் நுண்கலையை ஒரு புகைப்படக்காரர் அறிந்திருக்க வேண்டும். அப்படி மறைந்திருக்கும் அழகை வெளிச்சம் போட்டு காட்டுவதே ஸ்டில் லைஃப் போட்டோகிராஃபி. புகைப்படம் எடுப்பதை ஒரு தவமாக செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கும் போதும், ஒரு தடவை பிரணாயமம் செய்கிறேன். ஒரு புகைப்படக்காரருக்குள் ஒரு ஓவியன், ஒரு இசைக்கலைஞன் என
கவின் கலைகள் அறிந்த அனைத்து வித்தகனும் இருக்க வேண்டும். தொழில் மீது பக்தி, அழகுணர்வு, கலைநயம் என்று எல்லாம் சங்கமிக்கும் போது ஒரு உயிர் ஓவியமாக இருக்கும் நாம் எடுக்கும் புகைப்படம்.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஒரு சிறு குழந்தை கூட போட்டோ எடுக்க முடிகிறது. ஆனால் உண்மையாக போட்டோகிராஃபியில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகடும் குறைவாக இருக்க வேண்டும். கேமரா ஒரு எந்திரமாக இருக்கக் கூடாது...அது கலைஞனுக்கு அவன் படைப்புத் திறமைகளை வெளிக்
கொணரக்கூடிய ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களால் மட்டுமே எல்லா எபெக்டைஸையும் கொண்டு வந்து விட முடியும் என்றால், அங்கே படைப்பாளியின் பங்கு என்ன இருக்க முடியும். எந்த ஒரு புகைப்படத்தைப் பார்ததவுடன் மனதில் ஒரு தாக்கம் ஏற்படுகிறதோ அதுவே சிறந்த புகைப்படம். அந்தை புகைப்படத்தை எடுத்தவரே சிறந்த புகைப்படக்காரர்.
நல்ல புகைப்படம் மனதிற்கு பேரின்பத்தை தரும். நான் பெற்ற அந்த பேரின்பத்தை எல்லோரும் பெற வேண்டும் என்பதால் புகைப்படக்கலை பயிற்சிப்பட்டறைகளை அவ்வப்போது நடத்தி வருகிறேன். கற்பித்தலை வியாபாரமாக்கக் கூடாது என்பதால், போட்டோகிராஃபியில் உண்மையான ஆர்வம் கொண்ட மாணவர்கள் என்னை அணுகும் போது நான் அறிந்த
நுட்பங்களை அவர்களுக்குச் சொல்லித்தருகிறேன். போட்டோகிராஃபி என்பது ஊடகத்துறையையும் தாண்டி, எல்லாத் துறைகளிலும் ஊடுருவியிருக்கிறது. எனவே இதனை நேர்த்தியாக செய்பவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
போட்டோகிராஃபி சொசைட்டி ஆஃப் மெட்ராஸ் நடத்திய அகில இந்திய அளவிலான போட்டியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் விவி... போட்டோகிராபி நுணுக்கம் தெரியாத ஒரு சாமான்ய மனிதன் தன் புகைப்படத்தை பார்த்து பாராட்டும் ஒவ்வொரு தருணமும் தான் உயரிய விருது பெறுவதாகவே உணர்வதாகக் கூறினார்.
நிறைவாக... உருவத்தை பதிவு செய்து உயிராக திரும்பத் தரும் புகைப்படக்கலையை கொண்டாடும் உலக புகைப்படத் தினத்தை ஒட்டி இளைஞர்களுக்கு அளித்த அறிவுரை... "Try to emulate, don't envy good photographers"...அதாவது நல்ல புகைப்படக்காரர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்..பொறாமைப் படாதீர்கள் என்பதே.