தூத்துக்குடியில் கடற்கரை மணலில் இருந்து கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவிற்கு வருவாய்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமம் பெற்ற அனைவரையும் கனிமங்கள் எடுக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குழு தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை மணலில் இருந்து கனிமங்களை அள்ளுவதில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் மண்ணியல் துறை ஆணையருக்கு கடந்த 6-ம் தேதி அறிக்கை சமர்பித்து இருந்தார். தற்போது மண்ணியல் துறை ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு குழு அமைத்துள்ளதன் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட படுக்கபத்து கிராமத்தில் பீச் மினரல்ஸ் என்ற நிறுவனம் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும், இதுதொடர்பாக அந்த நிறுவனத்திற்கு 3 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஷ்குமார் கடந்த மாதம் 13 ஆம் தேதி தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அமைத்த இரண்டு குழுக்கள் அம்மாவட்டத்தில் உள்ள வேம்பார், வைப்பாறு உள்ளிட்ட கிராம கடற்கரைப் பகுதிகளில் ஆய்வு செய்தது.
வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 4 லட்சத்து 90 ஆயிரத்து 213 கனமீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியுள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு, ஆட்சியர் ஆஷிஷ்குமார் அறிக்கை அனுப்பினார்.
அதனைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் கடற்கரை மணலில் இருந்து கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.