சுதந்திரதினவிழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமின்றி, தமிழகம், மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தையொட்டி, தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, கடந்த வாரம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் பின்னர், குஜராத் கடல்பகுதியில் 13 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக, வடமாநிலத்தின் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி, செங்கோட்டையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருடன், தேசிய பாதுகாப்புப்படைப்படை கமாண்டோ பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைச் சுற்றிலும் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தினுடனான நேபாள எல்லையிலும் கண்காணிப்புப் பணிகள் பலத்தப்பட்டுள்ளன.
மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்றவை மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய நகரங்களையும் தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, சென்னையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவை பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை, கோவை, திருச்சி, கரூர் உள்ளிட்ட நகரங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பாம்பன் பாலம், ராமேஸ்வரம் கோயில் ஆகிய இடங்களிலும் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உளவுத்துறையின் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் தீவிர சோதனை நடத்தினர். புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகள், மதுபான விடுதிகள் போன்றவற்றில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில வாகனங்கள் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.