நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முன்னதாகவே நிரம்பிவிட்டதால், காவிரிப் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடிப் பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனாலும், சில இடங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதாகவும், வேளாண் கடன் பெறுவதில் பிரச்னை இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3.27 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் சாகுபடி பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, அடுத்த 30 நாட்களும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் ஆறு, கால்வாய்களில் முழுமையான அளவுக்கு தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த ஊராட்சி மற்றும் வட்டார அளவில் கண்காணிப்புக் குழுவை அமைக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி நிலவியதால் அப்போது பெற்ற வேளாண் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இருந்து விவசாயிகளுக்கு தமிழக அரசு தற்காலிக விலக்கு அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் கடன் வழங்கவும் கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனாலும், நிலுவையில் இருக்கும் கடன்களை காரணம் காட்டி கூட்டுறவு வங்கிகள், கடன் தர மறுப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
மொத்த சாகுபடி பரப்பில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி 1.93 லட்சம் ஏக்கரில் நேரடி நெல்விதைப்பு முறையில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலங்களில் களைகள் அதிக அளவில் இருப்பதால் மானிய விலையில் களைக்கொல்லி வழங்குமாறு தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.