பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியிருக்கும் நிலையில் அவருக்கு கட்சித் தலைவர்களிடம் ஆதரவு பெருகிவருகிறது.
இதுகுறித்து வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் விருப்பத்தை கூறியிருக்கிறோம்
பிரதமர் பதவிக்கு தாம் ஆசைப்படவில்லை என அண்மையில் கூறினார் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி. ஆனால் அவரை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்துவதில் பாரதிய ஜனதா தீவிரமாக இருப்பதை அந்த கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறது.
இதனை ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் மறைமுகமாக தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி கருத்து
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியும் கருத்து தெரிவித்துள்ளது.
நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு?
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானியை அந்த கட்சியின் முன்னாள் தலைவரான நிதின்கட்கரி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
விரைவில் நடைபெற உள்ள கட்சியின் நடாளுமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து ஆதிகாரப்பூர்வ முடிவு எடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜெய்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி வழக்கம் போல் பிரதமரையும் மத்திய அரசையும் கடுமையாக சாடினார்.
மோடிக்கு பெருகும் ஆதரவு
இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பலரும் நரேந்திர மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாட்டை மீட்க மோடியை விரைவில் பிரதமர் வேர்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.