வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்துக்கு பின், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இவரது பெயரை முன்மொழிவதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு, மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எழுதிய கடிதத்தில், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
கட்சியின் தலைவராக ராஜ்நாத்சிங் செயல்படும் விதம் அதிருப்தி அளிப்பதாக தெரிவித்திருந்த அத்வானி, தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கட்சித் தலைவர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு காரணமான, கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடுவோம் என்றும், நாட்டில் சிறந்த நிர்வாகத்தை அளிப்பதற்கு பாடுபடுவோம் என்றும் மோடி பேசினார்.
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கட்சியின் முன்னணி தலைவர்கள் நரேந்திர மோடிக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நரேந்திர மோடி கடந்து வந்த பாதை
நரேந்திர தாமோதர தாஸ் மோடி. குஜராத்தின், மெக்சானா மாவட்டத்தில் உள்ள வாத்நகர் பகுதியில் கடந்த 1950ம் ஆண்டு, முல்சந்த் மோடி - ஹீரா பென் தம்பதியருக்கு 3வது வாரிசாகப் பிறந்தார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இளம் வயதிலேயே தன்னை இணைத்துக் கொண்ட மோடி, 1975 முதல் 77ம் ஆண்டு வரையிலான நெருக்கடி நிலை காலகட்டத்தில் மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார்.
பின்னர் 1987ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த மோடி, அம்மாநில பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
சங்கர்சிங் வகேலாவுடன் இணைந்து கட்சி உறுப்பினர்களின் பலத்தை அதிகரிக்கச் செய்த மோடிக்கு 1995ம் ஆண்டு பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் பதவி தேடி வந்தது.
தொடர்ந்து 1998ம் ஆண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக உயர்ந்த மோடிக்கு, 2001ம் ஆண்டு குஜராத் முதலமைச்சர் பதவியும் தேடி வந்தது.
2001ம் ஆண்டு குஜராதில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து கேசுபாய் படேல் விலகினார்.
இந்த சம்பவமே மோடியின் அரசியல் பயணத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்து விட்டது.
அசைக்க முடியாத அரசியல் சக்தி
அன்றிலிருந்து இன்று வரை குஜராத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவே மோடி திகழ்ந்து வருகிறார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இந்தியாவின் வரலாற்றில் மட்டுமல்ல, மோடியின் அரசியல் வாழ்க்கையிலும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது.
ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தடுக்க மோடியின் அரசு தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலைச் சந்தித்தார் மோடி.
அந்த தேர்தலில் 127 தொகுதிகளைக் கைப்பற்றி, இமாலய வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
அதன் பின்னர் குஜராத்தின் வளர்ச்சிக்காக மோதி தீட்டிய திட்டங்களும், சிறப்பாக நடத்திய அரசு நிர்வாகமும், நிலநடுக்கத்தால் முடங்கிப் போன பொருளாதாரத்தை மீட்டெடுத்தன.
2007ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் பதவிக்கு வந்த மோடி, குஜராத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்கினார்.
ஒருபுறம் 2002 கோத்ரா கலவரம் தொடர்பாக மோடியை மையப்படுத்தி சர்ச்சைகள் தொடர்ந்த போதிலும், மறுபுறம் குஜராத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற முதலமைச்சர் என்ற பெருமையும் மோடிக்கு கிடைத்தது.
யோகா மற்றும் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள மோடி, இணையதளம் மற்றும் சமூக வளைதளங்களையும் அதிகமாக பயன்படுத்துபவர்.
14 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரை டூவிட்டரில் தொடர்ந்து வருகின்றனர்.