வனத்தில் அரிய உயிரினமாக வாழ்ந்து கொண்டிருக்கும் புலிக்காக ஒரு மனிதன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவர் ஆசனூர் கிருஷ்ணகுமார். வயது ஐம்பது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளைப் பாதுகாக்க கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் எடுக்கும் சிரத்தைகளைக் கண்டு ஊரே வியந்து பாராட்டுகிறது.
திருப்பூர் இயற்கைக் கழகமும், திருப்பூர் ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் புலிகளின் காவலன் ஆசனூர் கிருஷ்ணகுமாருக்கு திருப்பூரில் புதன்கிழமை மாலை விருது வழங்கி கெளரவப்படுத்தினர்.
“இன்று புலி அரிய உயிரினமாகிவிட்டது. புலியைக் காப்பாற்றும் முயற்சிகள் குறைந்ததால் அதன் எண்ணிக்கையும் அடியோடு குறைந்துவிட்டது. நாடு சுதந்திரம் அடைந்தபோது புலிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம். ஆனால் இன்றைய நிலைமை அப்படியே தலைகீழ். வெறும் 1500தான். நூறில் ஐந்து விழுக்காடுகூட இல்லை. இது எத்தனை பெரிய இழப்பு. ஒருபக்கம் புலிகள் வேட்டையாடப்படுவது தீவிரமாக இருந்ததும் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு மிக முக்கியக் காரணம். ஆனால், மலை கிராமங்களில் வாழும் மக்களின் ஆடு, மாடுகளை புலிகள் வேட்டையாடுகின்றன. அந்த புலிகளை மக்களே வேட்டையாடுகின்றனர் இன்று.
புலிகள் ஆடுமாடுகளை வேட்டையாடி தங்களின் வாழ்வாதாரத்திலேயே கைவைத்து விடுவதால் இயல்பான கோபம் மலைவாழ் மக்களுக்கு ஏற்படுகிறது. இதனால், ஒருசிலர் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில், புலிகள் வேட்டையாடி தின்றது போக மிச்சம் வைத்திருக்கும் ஆடு, மாடு் உடல்களின் மீது விஷத்தைத் தடவி வைத்துவிடுகின்றனர். இரண்டு மூன்று நாட்கள் கழித்து சேமித்து வைத்த உணவை மீண்டும் சாப்பிடும் பழக்கம் கொண்ட புலிகள் விஷத்துக்கு பலியாகின்றன.
அங்கு வாழும் மக்களுக்கு புலிகளின் தோல், பல், நகம் எதுவும் தேவை இல்லை. ஆனால், தங்கள் வாழ்வாதாரத்தைக் குதறிய புலிகள் மீது மலைவாழ் மக்கள் சிலர் காட்டும் எதிர்வினை இது. உண்மையிலேயே விலங்குகள் மீது அதீத பாசம் வைத்திருப்பவர்களே மலைவாழ் மக்கள்தான். எல்லாரும் அப்படியில்லை. ஒருசிலரின் தவறானப் போக்கை தடுக்கவேண்டும் என்ற உந்துதல்தான் என்னை இப்படி களம் இறங்க வைத்தது. கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் புலிகள் வேட்டையாடியதால் கால்நடைகளை இழந்த மக்கள் 360 பேருக்கு என் சொந்த செலவில் நிவாரணம் வழங்கி உள்ளேன். ஒரே காரணம், புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான்.
ஆசனூர், திம்பம் உள்ளிட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் புலியால் கால்நடைகளை இழந்த மக்களுக்கு நிவாரணத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கி வருகிறேன். தொடர்ந்தும் வழங்குவேன். திம்பம்- பகுதியில் ஒருவரின் ஏழு மாடுகளையும் புலிகள் அடித்துக் கொன்று தின்றுவிட்டுன. அதை முழுமையாக விசாரித்து நிவாரணம் வழங்கினேன். அப்பகுதியில் விலங்குகள் மக்களின் கால்நடைகளை உணவாகக் கொண்டால் தகவல் வரும். உடனடியாக களத்துக்கு சென்று ’அது புலி அடித்துதான் இறந்துள்ளதா?’ என்பதைக் கண்டறிந்து நிவாரணத் தொகை வழங்கி வருகிறேன். ஆடு, மாடுகள்தானே மலைவாழ் மக்களின் வாழ்வதாரம். அவர்கள் அந்த மண்ணை விட்டு வேறு எங்கே போவார்கள்? நான் இப்போதும் ஒரு விவசாயி. என் குடும்பத் தேவை போக மீதமுள்ள வருவாயைப் புலிகளுக்கு செலவிடுகிறேன். ஆகவே, நான் புலிகளின் நண்பன்” என்கிறார் அழுத்தமாக.
வனத்துறையோடு இணைந்து புலிகளைக் காப்பது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கிருஷ்ணகுமார். இந்த பாராட்டு விழாவில் திருப்பூர் இயற்கை கழகத் தலைவர் செந்தில்ராஜன், செயலாளர் கா. ரவீந்திரன், பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, திருப்பூர் ரோட்டரி கிளப் தலைவர் சிவராஜ், செயலாளர் கே.நாகராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது
மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாத நாற்காலிகள் கிடையாது மரச்சாமான்கள் இல்லை.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது?
தொழிற்சாலைகளுக்காகவும்.. வீடுகளுக்காகவும் வெட்டப்படும் மரங்கள் ஈடு செய்யப்படுவதில்லை.. மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண் வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்... மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..
ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..
-பசுமை நாயகன்