அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்ற உத்தரவில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சம்பளம், வருங்கால வைப்பு நிதி பட்டுவாடா, திருமணம், சொத்து பதிவு செய்தல் போன்றவற்றிற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என சில மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. மேலும் நேரடி மானிய திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணையில் மத்திய அரசு தரப்பிலும், ஆதார் அட்டை வழங்கும் ஆணையம் சார்பிலும் தெரிவிக்கப்பட்ட பதிலில், ஆதார் அட்டை பெறுவது கட்டாயமல்ல என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய அரசு , கடந்த 4ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் திட்டங்களுக்கான பலன்களைப் பெற, ஆதார் அடையாள அட்டை கட்டாயம் அல்ல என்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்று தெரிவித்தனர்.
மருத்துவக் குணமுள்ள கூர்க்கன் மூலிகை செடி சாகுபடியில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே அய்யாசாமிபட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 40 ஏக்கரில் கூர்க்கன் மூலிகை செடியை தோட்டக்கலைத்துறை உதவியுடன் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் இந்த பயிருக்கு பூச்சிகள் மற்றும் கால்நடைகள் தொல்லை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பயிரை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதாகவும், ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த பயிரை சாகுபடி செய்ய மத்திய அரசு ஏக்கருக்கு 3 ஆயிரத்து 250 ரூபாய் மானியம் வழங்குகிறது. நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்க கூர்க்கான் செடி பயன்படுத்தப்படுகிறது.