பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. புயல் தாக்கியபோது பெய்த கனமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பிலிப்பைன்சில் உள்ள தீவுகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகமும் தடைபட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்கு ராணுவ ரீதியிலான உதவி அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மணிக்கு 315 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், புயல் கரையைக் கடந்த பகுதிகளில் 80 சதவீத வீடுகள் சேதமடைந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுகாத்தி நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை
சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்ற கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
நவேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றம், சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்றும், தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க அந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்றும் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால், நிலுவையிலுள்ள ஒன்பதாயிரம் வழக்குகளும், ஆயிரம் வழக்குகளின் விசாரணைகளும் நேரடியாக பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், ஆர்.பி. தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, இன்று மாலை நடைபெற்றது.
அப்போது, ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் வாகன்வதி, கவுகாத்தி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தவறானது என்பது குறித்து வாதாடினார். இதற்கு மனுதாரர் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. விவகாரத்தில் இரு தரப்பிலும் நிறைய வாதங்கள் கேட்கப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும், கவுகாத்தி நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தும், நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மனுதாரர் நவேந்திரகுமார் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.