பொள்ளாச்சி நகராட்சி, நேரு நகர் பகுதியில் "நம்ம டாய்லெட்'டை நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் திறந்தவெளிக் கழிப்பிடத்தை ஒழிக்கும் திட்டத்தின் கீழ் "நம்ம டாய்லெட்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிதம்பரம், உதகை, கோவை ஆகிய இடங்களில் செயல்பாட்டில் இருக்கும் இந்தத் திட்டம், பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு, நேரு நகர் பகுதியில் இதற்காக 3.5 சென்டில் இடம் ஒதுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் 6 பேர் பயன்படுத்தும் வகையிலான நவீன டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியும், கை கழுவ சோப் ஆயில் வசதியும் உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார் இதைத் திறந்துவைத்தார். ஆணையர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். நகராட்சிப் பொறியாளர் ராஜா, வார்டு கவுன்சிலர் ஐசாமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ""ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில நிதி மூலம் ரூ. 45 லட்சம் ஒதுக்கப்பட்டு, பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் மேலும் மூன்று இடங்களில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட உள்ளது'' என்றார்.
நெல்சன் மண்டேலா
"இனியொருவர் நிகரில்லை உனக்கு!'
உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக்கிறார்கள்; மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், ஒருவர் நம்முடன் வாழ்ந்தார், இப்போது மறைந்துவிட்டார்.
நெல்சன் மண்டேலாவின் மரணம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த சில ஆண்டுகளாகவே முதுமையும், உடல்நலக் குறைவும் அவரை நடைப்பிணமாக்கி விட்டிருந்தது. ஆனாலும் கூட, இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது, லட்சியவாதிகளுக்கும் சுயமரியாதை, சுதந்திரம் போன்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோருக்கும் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. இனி நாம், அண்ணல் காந்தியடிகளை நினைவில் நிறுத்தி செயல்படுவதுபோல, எங்கெல்லாம் இனவெறி எழுகிறதோ, எங்கெல்லாம் சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெல்சன் மண்டேலாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டாக வேண்டும்.
அண்ணல் காந்தியடிகளைத் தனது முன்னோடியாகக் கொண்டு, அவர் விட்ட இடத்திலிருந்து தனது பணியைத் தொடங்கியவர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்க இனவெறி அரசுக்கு எதிராக அவர் நடத்தியது ஆயுதப் போராட்டமல்ல. அண்ணலின் வழியிலான அமைதிப் போராட்டம், அகிம்சைப் போராட்டம். 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த நெல்சன் மண்டேலாவால், கருப்பர் இன மக்களின் சுதந்திர வேட்கை தணிந்துவிடாமல் பாதுகாக்க முடிந்தது என்றால், அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர் கொண்ட லட்சியத்தில் இருந்த பிடிப்பும்தான் காரணம்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் போனால், அடையாளம் தெரியாதவர்களாகிவிடும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், 27 ஆண்டுகள் போராட்டக் களத்திலிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் அகற்றப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோதும், அந்தத் தலைவனால் உயிர்ப்புடன், மன உறுதி தளராமல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது என்பதுதான் நெல்சன் மண்டேலாவை ஏனைய தலைவர்களிலிருந்து அகற்றி நிறுத்துகிறது. அண்ணாந்து பார்க்க வைக்கிறது.
1994இல் தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி அகற்றப்பட்டு, குடியரசு அமைந்தவுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, தன்னை நிரந்தரத் தலைவராக அறிவித்துக் கொள்ளவில்லை. இரண்டாம் முறை போட்டியிட மறுத்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகள் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தவர், 2004இல் பொது வாழ்விலிருந்தே விலகிக் கொண்டுவிட்டார். தான் கொண்ட குறிக்கோளை அடைந்து, தென்னாப்பிரிக்கா நிரந்தரமாகத் தன்னுரிமை பெற்ற குடியரசாகத் தொடர்வதை உறுதிசெய்துவிட்டு, கடமை முடிந்தது என்று நடையைக் கட்டிய கர்மவீரர் நெல்சன் மண்டேலா.
27 ஆண்டு காராகிருகவாசம் அனுபவித்தபோது, கட்சியைக் கட்டிக் காத்தவர், போராட்டத்தின் வீரியம் குறையாமல் பாதுகாத்தவர் அவரது மனைவி வின்னி மண்டேலா. தென் ஆப்பிரிக்காவில் குடியரசு ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சராகப் பொறுப்பும் ஏற்றார். அமைச்சரான தனது மனைவி அதிகார போதை தலைக்கேறி செய்த ஊழல்கள் வெளிவந்தபோது, சற்றும் தயங்காமல், அதை மறைக்க முயலாமல் சட்டம் தனது கடமையைச் செய்யப் பணித்தவர் நெல்சன் மண்டேலா.
இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனிமைச் சிறையிலிருந்து விடுதலையானதும் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் நினைத்திருந்தால் தனது மனைவியைப் பாதுகாத்திருக்க முடியும். தவறுகளை மன்னித்திருக்க முடியும். பொது வாழ்க்கையில் நேர்மையும் தூய்மையும் பற்றி பலரும் பேசுவார்கள். நெல்சன் மண்டேலா வாழ்ந்து காட்டினார்.
அண்ணல் காந்தியடிகளைப் போல, அவரும் வாரிசு அரசியலுக்கு வழிகோலவில்லை. தனது குழந்தைகளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, தனது அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை, பதவிக்குப் பரிந்துரைக்கவும் இல்லை.
ஒரு சமுதாயப் போராளி, அரசியல் தலைவர், லட்சிய புருஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தனை நாளும் நம்மிடையே வாழ்ந்தவர் நெல்சன் மண்டேலா. நம்மில் பலர், குறிப்பாக அரசியல்வாதிகளில் பலர், அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை. இப்போது மரணமடைந்து விட்டார். மரணமாவது அவரைப் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தட்டும்.
நெல்சன் மண்டேலா பற்றி சொல்வதாக இருந்தால் இதுதான் சொல்ல முடியும் - "இனியொருவர் நிகரில்லை உனக்கு!'
131வது பிறந்தநாள் காணும் மகாகவி பாரதி
மகாகவி பாரதி, இவரை நாமும் நமது இந்தியாவும் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. டிசம்பர் 11ம் திகதி இவரது 131வது பிறந்தநாளை இந்திய நாடு கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர். கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் பாரதியார் என்றால் மிகையாகாது.
இவரது கவித்திறனை கண்டு வியந்த எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் சுப்புரமணியாக இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார்.
அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார்.
பல மொழிகளை கற்று அறிந்த இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரதியின் படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும். பாஞ்சாலி சபதம் புதிய ஆத்திச்சூடி சுயசரிதை பாரதி அறுபத்தாறு ஞானப் பாடல்கள் தோத்திரப் பாடல்கள் விடுதலைப் பாடல்கள் சந்திரிகையின் கதை
விடுதலைப்போராட்டத்தில் பாரதியி்ன் பங்கு
கற்று அறிந்த தமிழ் மொழியையும் கவிதை திறனையும் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.
"வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"
என்ற இவரது வரிகள் அனேக இளைஞர்களை விடுதலைப் போராட்டத்திற்கு தூண்டியது. இவரது வரிகளால் ஈர்க்கப்பட்ட அநேகர் சுதந்திர போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றால் மிகையாகாது.
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” - என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம்பிக்கையுடன் பாடிய இவரது வரிகள் அக்காலக்கட்டத்தில் புத்துணுர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் துரதிஸ்ட வசமாக விடுதலைக்கு முன்பே செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு மறைந்தார்.
|