வனத்துறை முகாம் யானைகளுக்கு, வேறு இடத்தில் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கும், வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல்வேறு கோவில்களில் 48 யானைகள் பராமரிக்கப்படுகின்றன; ஆண்டு முழுவதும் சங்கிலியில் கட்டப்பட்டு, கற்களால் ஆன தரை தளங்களில் நிறுத்தப்பட்டு, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வரும் இந்த கோவில் யானைகளுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை இயற்கையான சூழலில் ஓய்வு அளித்து, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் முகாம்களை நடத்த வேண்டுமென்று, மறைந்த பிரபல யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.அதனை ஏற்று, கடந்த 2002 முதல், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது; ஆறாவது முகாம், தேக்கம்பட்டி அருகில் நாளை (டிச.,19) துவங்கவுள்ளது. இந்த ஆண்டு முகாமில், கோவில் யானைகளுடன் தெப்பக்காடு மற்றும் டாப்ஸ்லிப்பில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான யானைகளுக்கும் முகாம் நடத்துவதாக அரசு அறிவித்தது; இதற்கு, சூழல் ஆர்வலர்கள், வன உயிரின ஆர்வலர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவில் யானைகளுக்கு உள்ள காசநோய் உள்ளிட்ட நோய்கள், முகாம் யானைகளுக்குப் பரவி, அதன் மூலமாக காட்டிலுள்ள வன உயிரினங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால், இந்த முகாமிற்கு தடை விதிக்கக்கோரி, தமிழ்நாடு பசுமை இயக்க மாநில இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் சார்பில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், வனத்துறை முகாம் யானைகளுக்கு, மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லித்துறை அருகிலுள்ள விளாமரத்தூர் என்ற இடத்தில் தனியாக முகாம் நடத்த, அவசரமாக ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கும் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கோவை பொறுப்பாளர் மோகன்ராஜ் கூறுகையில்,
""வனத்துறை முகாம் யானைகளை வேறு இடங்களுக்குக் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லை. அந்த யானைகள், நல்ல உணவு, தண்ணீர், மேய்ச்சல் என அருமையான சூழலில் உள்ளன; அவற்றை லாரியில் ஏற்றி, கஷ்டப்படுத்தி, வேறு இடங்களுக்கு கொண்டு வந்து முகாம் நடத்துவது, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்; இதற்காக, நெல்லித்துறை பகுதியில் வனப்பகுதியை சுத்தம் செய்வதும், அங்கு சூரிய மின்வேலி அமைப்பதும் அவசியமற்றது,'' என்றார்.
கால்நடை டாக்டர் ஒருவர் கூறுகையில், "இந்த ஆண்டில், வழக்கமான குளிர் காலமாக இல்லாமல், பனி, மழை, வெயில் என காலநிலை மாற்றம் மோசமாகவுள்ளது. அதனால்தான், கோமாரி பரப்பும் வைரஸ், தொண்டை அடைப்பான் பரப்பும் பாக்டீரியாக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, காற்றில் பரவி வருகின்றன. இதுவரை, 25 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளன. இது மேலும் பரவக்கூடாது என்பதற்காகவே, மாட்டுச்சந்தைகளை அரசு தடை செய்துள்ளது. இதே வைரஸ் மற்றும் பாக்டீரியா, யானைகளுக்கும் எளிதில் பரவக்கூடும். தற்போதுள்ள சீதோஷ்ணநிலையில், இந்த முகாமை ஓரிரு மாதங்களுக்கு தள்ளி வைப்பது நல்லது,' என்றார்.
வனத்துறை முகாம் யானைகளுக்கு தனியாக முகாம் நடத்துவதுபற்றி அவரிடம் கேட்டபோது, "முகாம் யானைகள், கும்கி யானைகள் அனைத்தும், ஏற்கனவே இயற்கையான சூழலில், நல்ல நிழல், காற்று, தேவையான அளவுக்கு புல் மற்றும் தாவரங்கள், தண்ணீர் வசதியுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றன. தினமும் 5 அல்லது 10 கி.மீ., சுற்றளவில் மேய்ச்சலுக்குச் சென்று, சுதந்திரமாக வாழ்கின்றன. அந்த யானைகள், வண்டிகளைப் பார்த்தாலே அச்சப்படும்; அவற்றை கஷ்டப்படுத்தி, கீழே கொண்டு வந்து, தகரக் கூரைகளின் கீழ் கட்டி வைப்பது, நிச்சயம் புத்துணர்வு இல்லை; தண்டனைதான்' என்றார்.
இதே கருத்தை, வன உயிரின ஆர்வலர்கள் பலரும் கூறுகின்றனர். இந்த விஷயத்தில், முதல்வருக்கு வனத்துறை உயரதிகாரிகள், தவறான வழிகாட்டுதலை வழங்கியுள்ளனர் என்பதே இவர்களின் குற்றச்சாட்டு. முகாம் யானைகளைத் துன்புறுத்தாமல், அவை வசிக்கும் முகாம்களிலேயே, சிறப்பு உணவு, ஓய்வு வழங்கி, புத்துணர்வு அளிக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. முகாம் நாளை துவங்கவுள்ளதால், முடிவு முதல்வரின் கையில்தான் உள்ளது.