ஆறுகளைப் பாதுகாக்க, மணலுக்குப் பதிலாக மாற்றுப் பொருளைக் கண்டறிய வேண்டும் என்று, கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வாமனாச்சார்யா வலியுறுத்தினார்.
கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "ஆற்று மணலுக்கு மாற்றுவழி- நிலையான வளர்ச்சிக்கு வழி' என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது. உள்கட்டமைப்புகளை அமைக்க ஆற்று மணல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இயற்கை வளம் சீரழிந்து வருகிறது. இதைத் தடுக்க மணலுக்குப் பதிலாக மாற்று வழியைக் கண்டறிய வேண்டும்.
கட்டடம் கட்டுவதற்கு மணலுக்குப் பதிலாக வேறு பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். கட்டுமானத் துறையில் உருவாகும் திடக் கழிவுகளை மணலுக்குப் பதிலாக பயன்படுத்த முடியுமா? என்பதையும் ஆராய வேண்டும்.
ஆற்று மணலைப் பாதுகாப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். ஸ்டீல் தொழிற்சாலையில் இருந்து பெறப்படும் உலைக் கசடு, அலுமினியம் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவான சிவப்பு மண், அனல் மின் நிலைய கழிவான சாம்பல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மணல், சிமென்டை தயாரிக்கலாம் என்றார் அவர்.
இந்திய அறிவியல் கழக (ஐஐஎஸ்சி) கட்டுமானப் பொறியியல் துறைத் தலைவர் வெங்கட்ராம ரெட்டி பேசியது:
திடக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மணல் ஆற்று மணலைக் காட்டிலும் திடமாக இருப்பதாக சோதனைகள் உறுதி செய்துள்ளன. குதிரேமூக் இரும்பு தொழிற்சாலை உள்ளிட்ட இதர ஸ்டீல் தொழிற்சாலைகளில் காணப்படும் கழிவுப் பொருள்களை மணலாக பயன்படுத்தலாம்.
கோலார் தங்கவயலில் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்மேடு உள்ளது. வீணாகக் கிடக்கும் இந்த மண்மேட்டை வெட்டியெடுத்து மணலாகப் பயன்படுத்தி, ஆற்று மணலைப் பாதுகாக்கலாம் என்றார் அவர்.