சீனாவில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட போலி உரங்கள், டெல்டா மாவட்டங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போதுமான மழையின்மை, மேட்டூர் அணை வறண்டதால், கடந்தாண்டு டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஒரு லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. '12 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடி நடக்கும்' என, அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
உரங்களின் விலை உயர்வு:
வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து, டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடியின் வேகம் அதிகரித்து உள்ளது. விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, கூலியாட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால், சாகுபடி செலவு அதிகரித்து விட்டது.இந்த சூழ்நிலையில், டெல்டா மாவட்டங்களில், இறக்குமதி செய்யப்பட்ட போலி உரங்கள், அதிகளவில் வினியோகிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் துறைமுகத்திற்கு, சீனாவில் இருந்து உரங்கள், தனியார் நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சத்து குறைவான:
சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டு குடோனில் வைக்கப்பட்டிருந்த, 37 ஆயிரம் டன் உரங்களை, புதுச்சேரி வேளாண் துறை, உரக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவை, சத்து குறைவான போலி உரங்கள் என்பது, அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, அந்த குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இந்த உரங்களில், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் கனிமங்களின்
அளவு, சரியாக இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.ஏற்கனவே, இறக்குமதி செய்யப்பட்ட, 10 ஆயிரம் டன் போலி உரங்கள், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.சம்பா சாகுபடி பருவம் துவங்கியது முதலே, போலி உரங்களை இறக்குமதி செய்து, வினியோகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆந்திரா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும், கடல் மார்க்கமாக, போலி உரங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போலி உரங்களை பயன்படுத்துவதால், பயிர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, நிலத்தின் தன்மையும், வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.