அண்டை மாநிலங்களுடனான, நீர் பங்கீட்டு பிரச்னைகள், பல ஆண்டு களாகியும், தீர்க்கப்படாததால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, பல டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, 34 ஆற்றுவடி நிலங்கள், 17 பெரிய வடிநிலங்களாகவும், 127 உப வடிநிலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.சராசரி மழையளவு, 912 மி.மீ., தமிழகத்தில் உள்ள, 58 பெரிய அணைகள், நான்கு சிறிய அணைகள், இவற்றின் மொத்த கொள்ளளவு, 239 டி.எம்.சி., தமிழகத்தில், 13,699 ஏரிகள் உள்ளன.நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள, மொத்த நீர்நிலைகளின், மேற்பரப்பு நீர்வளம், 592 டி.எம்.சி., இவற்றில் இருந்து, போதுமான நீர் கிடைக்காத போது, அண்டை மாநிலங்களில் இருந்து, 261 டி.எம்.சி., நீர் பெறப்படும்.இருப்பினும், இவற்றில் இருந்து நீர் பெறுவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. முல்லைப் பெரியாறு, பாலாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, ஆனைமலையாறு, மணக்கடவு, நீராறு - நல்லாறு இணைப்பு, நெய்யாறு இடது கரை கால்வாய் பாசன திட்டம், காவிரி, செண்பகவல்லி அணைக்கட்டு சீரமைப்பு, பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு போன்ற திட்டங்களில், தமிழகத்துக்கும், பிற மாநிலங்களுக்கும் இடையில், பல ஆண்டுகளாக, நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகள் நிலவி வருகிறது.
இவற்றில், காவிரி பிரச்னையில், இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியீடு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில், சுமுக உடன்படிக்கையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக நீடித்து வரும், மற்ற பிரச்னைகளுக்கு, இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை.இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, பல டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது.
தூங்கும் தமிழக அரசு. கடலில் கலந்து வீணாகும் மழைநீர். இனியாவது கண்டு கொள்ளுமா ?
கடந்த காலங்களிலும், இதே போல், பருவமழையின் போது, தமிழகத்திற்கு கிடைத்த பல டி.எம்.சி., தண்ணீர், வீணடிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 2005ல், 70.96 டி.எம்.சி., - 2006ல், 42.85 டி.எம்.சி., - 2007ல், 64.41 டி.எம்.சி., - 2008ல், 78.15 டி.எம்.சி., - 2009ல், 65.42 டி.எம்.சி., தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் சென்று வீணாகியுள்ளது. அதன் பிறகு போதுமான மழை இல்லாததால், கொள்ளிடம் ஆறு வறண்டது. அதனால், மணல் குவாரிகளுக்காக, இந்த ஆற்றை அரசு பயன்படுத்தி வருகிறது. "கொள்ளிடம் ஆற்றில், தண்ணீரை தேக்குவதற்கான, முறையான திட்டமிடல் இல்லாததே, இதற்கு காரணம்' என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
-பசுமைநாயகன்